தமிழ்நாடு செய்திகள்

வீட்டை இடித்ததால் தற்கொலை முயற்சி- பார்வையற்ற தம்பதிக்காக கிராமமே ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சி

Published On 2022-11-18 11:55 IST   |   Update On 2022-11-18 11:55:00 IST
  • பார்வையற்ற மாற்றுத்திறனாளி காலில் விழுந்து கதறியும் கேட்காமல் வீட்டை இடித்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது.
  • கோர்ட்டில் தீர்ப்பு அளித்தாலும் உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்காமல் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது40). இவரது மனைவி நிர்மலா (35). பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான இவர்களுக்கு ஜனனி (16) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜெயபால் மற்றும் அவரது மனைவி கிராமம் கிராமமாக சென்று பத்தி, சூடம் விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் வசித்து வந்த வீடு ஆக்கிரமிப்பில் இருந்ததாக அதே பகுதியை சேர்ந்த மொக்கைச்சாமி என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜெயபால் வீடு மட்டுமின்றி அவரது வீட்டிற்கு அருகில் இருந்த மேலும் 4 வீடுகளும் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி அதனை இடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் உதவியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை இடிக்க மொக்கைச்சாமி ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தார். அப்போது மற்ற வீடுகளை கூட இடித்துக்கொள்ளுங்கள் பார்வையற்றவர்களின் வீட்டை மட்டும் இடிக்க வேண்டாம் என தெரிவித்தும் அவர் கேட்காமல் இடித்து தரைமட்டமாக்கினார். இதனால் வேதனை அடைந்த ஜெயபால், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகிவிட்டதாலும் தனது குழந்தையின் புத்தகங்களை கூட எடுக்க முடியாததால் அவரது படிப்பை தொடர முடியாத நிலையில் ஜெயபால் குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இதனால் ஊரை விட்டு வேறு எங்காவது சென்று விடலாம் என்று முடிவு செய்தனர். தற்போதுவரை அவர்கள் அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சையில் இருப்பதால் திரும்பி வந்தாலும் அவர்களுக்கு இருப்பிடம் இல்லாத நிலை உருவானது. இதனை உணர்ந்த மயிலாடும்பாறை கிராம மக்கள் அவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.

இன்று மயிலாடும்பாறையில் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து நிர்வாகிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி காலில் விழுந்து கதறியும் கேட்காமல் வீட்டை இடித்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. கோர்ட்டில் தீர்ப்பு அளித்தாலும் உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்காமல் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மயிலாடும்பாறையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. ஆட்டோக்கள் ஓடவில்லை. ஊர் மக்கள் அனைவரும் நிதி திரட்டி ரூ.3 லட்சம் மதிப்பில் ஜெயபால் குடும்பத்தினருக்கு ஒரு வீடு கட்டி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்தி தர ஒரு தொழில் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு கிராமமே ஒன்று சேர்ந்து கடைகளை அடைத்து உதவி கரம் நீட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News