தமிழ்நாடு

பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2023-11-14 07:16 GMT   |   Update On 2023-11-14 07:16 GMT
  • போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் 12 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
  • தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.

மதுராந்தகம்:

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்த வெளிமாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் பஸ், கார், ரெயில்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பிவரவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நேற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று மாலை முதல் கார் மற்றும் பஸ்களில் சென்னை வரத்தொடங்கினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்க வரத்தொடங்கியதால் நேற்று இரவு முதலே சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தொடங்கியது.

இந்த போக்குவரத்து நெரிசல் விடிய, விடிய நீடித்தது. செங்கல்பட்டு மாவட்ட தொடக்க எல்லையான மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் இரவில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து வாகனங்களை விரைவாக சென்னை நோக்கி அனுப்புவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழக்கம்போல் 5 கவுண்டர்களில் செல்லும் வாகனங்கள் கூடுதலாக 3 கவுண்டர்கள் வழியாக அனுப்பப்பட்டன. கூடுதல் கவுண்டர்கள் வழியாக வாகனங்கள் விரைந்து சென்றன. நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

இதேபோல் பரனூர் சுங்கச்சாவடியிலும் இரவு முதலே வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. அங்கும் கூடுதல் கவுண்டர்கள் வழியாக சென்னைக்குள் அனுப்பப்பட்டன. சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்கள் மொத்தமாக செல்வதை தடுக்கும் வகையில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து வந்து கொண்டு இருந்தன.

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெளியூர்களில் இருந்து வந்த பஸ்கள் அனைத்தும் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் புறவெளி வட்டச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லை. எனினும் வண்டலூர் பகுதியில் ஏராளமான பயணிகள் இறங்கி மாறி சென்றதால் அங்கு கடுமையாகன நெரிசல் ஏற்பட்டது. கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். பயணிகள் செல்வதற்கு மாநகர பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.

கோயம்பேடு நோக்கி வந்த வாகனங்களால் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் தொடங்கி 100அடி சாலையில் ஈக்காட்டுதாங்கல், அசோக் பில்லர், வடபழனி உள்ளிட்ட முக்கிய சந்திப்பில் அதிகாலை 4மணி முதலே கடும் நெரிசல் ஏற்பட்டது. காலை 6 மணிக்கு மேல் கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் இருந்து வரும் வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டு செல்பவர்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் மதுரவாயல்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் 12 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். கோயம்பேடு-பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை பஸ் நிலைய சந்திப்பு, மெட்டுக்குளம் சந்திப்பு, காளியம்மன் கோவில் தெரு சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏராளமான போலீசார் நெரிசலை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

Tags:    

Similar News