தமிழ்நாடு செய்திகள்

நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை- ஊட்டி மார்க்கெட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதி

Published On 2023-08-11 10:16 IST   |   Update On 2023-08-11 10:16:00 IST
  • சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. லேசான சாரல் மழையாக தொடங்கி பலத்த மழை கொட்டி தீர்த்தது.
  • கூடலூர் பகுதியில் பெய்த மழைக்கு பொன்னானி, சேரம்பாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை குறைந்து மிதமான அளவில் வெயில் அடித்து வந்தது.

நேற்று காலையும் வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு காலநிலை முற்றிலும் மாறி இதமான காலநிலையே நிலவி வந்தது.

சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. லேசான சாரல் மழையாக தொடங்கி பலத்த மழை கொட்டி தீர்த்தது.

மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, குன்னூர், பந்தலூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஊட்டியில் திடீரென கொட்டி தீர்த்த மழையால், சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்பட்டனர். வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே சென்று வந்தனர்.

மழைக்கு கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் அதிகளவில் சென்றது. மேலும் ஊட்டி மார்க்கெட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இதேபோல் மழைக்கு சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து, அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இந்நிலையில், கோத்தகிரி-ஊட்டி சாலையில், மடித்தொரை கிராமம் அருகே 2 ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.

இதில் அந்த சாலையில் பெரியளவில் பள்ளம் ஏற்பட்டு, முற்றிலும் சேதம் அடைந்தது. போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினா் பாறை விழுந்ததால் சாலையில் ஏற்பட்டிருந்த சேதங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. மழையுடன் கடும் பனிப்பொழிவு, மேகமூட்டமாகவும் காணப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

கூடலூர் பகுதியில் பெய்த மழைக்கு பொன்னானி, சேரம்பாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அய்யன்கொல்லி அருகே எலியாஸ் கடை வழியாக பந்தலூர் செல்லும் சாலையில் உள்ள பள்ளத்தில் மழை வெள்ளம் நிரம்பி குளம்போல் காட்சி அளித்தது.

Tags:    

Similar News