தமிழ்நாடு

சேவூர் பகுதியில் வாழை மரங்கள் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

அவினாசி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை- 25ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

Published On 2023-05-22 04:29 GMT   |   Update On 2023-05-22 04:29 GMT
  • சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் வருவாய், தோட்டக்கலை த்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
  • கணக்கெடுப்பு குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்த பின்பு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அவினாசி:

திருப்பூா் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில் அவிநாசி பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அவினாசி, சேவூா், புதுப்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், கருவலூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காற்று வீசியதால் இப்பகுதிகளில் சுமாா் 50 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் வருவாய், தோட்டக்கலை த்துறையினா் ஈடுபட்டுள்ளனா். கணக்கெடுப்பு குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்த பின்பு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சூறாவளி காற்றால் சாய்ந்த வாழைகள், பயிரிட்ட 15 மாதங்கள் கழித்து அறுவடை செய்யும் பயிராகும். ஒரு வாழைக்கன்றை ரூ.40 முதல் ரூ.50 வரை வாங்கி பயிரிட்டோம். இந்த கன்றை நடுவதற்கு முன்பு உழவு செய்ய வேண்டும். அதற்கு ஒரு கன்றுக்கு ரூ.10 செலவு ஆகிறது.

உழவுக்கு பின் கன்று நடுவதற்கு ரூ.10 ஆகிறது. மொத்தம் 70 ரூபாய் கன்று நடும் போதே செலவு ஆகிறது. அதன் பின் 15 மாத காலங்களில் உரம், பூச்சி மருந்துகளுக்கு செலவாகும். ஒரு வாழை மரத்திற்கு ரூ.150 வரை செலவு ஆகிறது. 1 ஏக்கரில் 1000 வாழைகள் நடுகிறோம். இந்த நிலையில் 1 ஏக்கருக்கு சுமார் ரூ.1½ லட்சம் செலவு ஆகிறது.

குலை தள்ளி அறுவடைக்கு குறைந்த நாட்களே இருக்கும் போது இயற்கை சீற்றத்தால், சூறாவளி காற்றால் அனைத்து வாழை மரங்களும் சாய்ந்து எங்களது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறி ஆக்கி விடுகிறது. வருவாய் துறையினர் ஒவ்வொரு முறையும் கணக்கெடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புவதாக தெரிவிக்கிறார்கள்.

ஆனால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு எந்தவித இழப்பீடு தொகையோ, நிவாரண தொகையோ எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி தற்போது சேதமடைந்துள்ள வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News