தமிழ்நாடு

போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை முறையாக பராமரிக்காதது ஏன்?: மதுரை ஐகோர்ட் கேள்வி

Published On 2023-10-21 07:28 GMT   |   Update On 2023-10-21 07:28 GMT
  • நீதிபதி மனுதாரர் தெரிவிக்கும் போலீஸ் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினார்.
  • போலீஸ் தரப்பு வக்கீல் ஆஜராகி, மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் சி.சி.டி.வி.யின் கேமரா பதிவு ஹார்ட்டிஸ்க் இல்லை என தெரிவித்தார்.

மதுரை:

மதுரையை சேர்ந்த நூர் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகன் சையது இஸ்மாயில், இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். கைப்பந்து வீரரான இவர் மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த எனது மகன் கடந்த மாதம் விடுமுறையில் மதுரை வந்தார்.

கடந்த மாதம் 4-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இரவு நேரத்தில் மதுரை மாநகர போலீஸ் சிறப்பு பிரிவில் உள்ள சப்- இன்ஸ்பெக்டர் சிவா, போலீஸ்காரர் காமராஜ் உள்ளிட்ட சிலர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து என் மகனை கைது செய்தனர்.

எனது செல்போனையும் பறித்து சென்றனர். இதையடுத்து எனது மகனின் நண்பர்களான சேக் முகம்மது, விஜய், முகமது இஸ்மாயில் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். போலீசாரின் இந்த செயல், மனித உரிமை மீறலாகும்.

எனவே எனது மகன் உள்ளிட்டவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கியது தொடர்பான விசாரணைக்காக, மதுரை மாநகர பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் கரிமேடு போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் முகமது அலி ஜின்னா ஆஜராகி, மனுதாரர் மகன் உள்ளிட்டவர்களை போலீசார் சட்ட விரோதமாக தாக்கி உள்ளனர். அது சம்பந்தமான சாட்சிகளை விசாரிப்பதற்கு வசதியாக போலீஸ் நிலைய கண்காணிப்பு கேமராக்கள் பதிவு அவசியமாகிறது. இதை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

அப்போது நீதிபதி மனுதாரர் தெரிவிக்கும் போலீஸ் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு போலீஸ் தரப்பு வக்கீல் ஆஜராகி, மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் சி.சி.டி.வி.யின் கேமரா பதிவு ஹார்ட்டிஸ்க் இல்லை என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி கூறுகையில், முறையாக சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் இருக்க வேண்டும். அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உள்ள நிலையில் எவ்வாறு இது போன்று பதிலளிக்கிறீர்கள். அதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை மனுதாரர் கோரும் சம்பவ நாளன்று பதிவுகளை பாதுகாக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்கும்படியும் மதுரை போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்

Tags:    

Similar News