ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டிய 3 மாணவர்கள் கைது
- ஆசிரியர்கள் கழிப்பறை செல்லும் போது கதவை வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
- கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே ஜெய்கோபால் கரோடியா என்ற அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள் அங்கு பாடம் நடத்தும் ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும் தகாத முறையில் நடப்பதாக புகார் எழுந்தது.
மேலும் ஆசிரியர்கள் கழிப்பறை செல்லும் போது கதவை வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த 3 மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் அறிவுரை சொன்னார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. மாறாக மற்ற மாணவர்களை துன்புறுத்தினார்கள். இதை தட்டிக் கேட்ட ஆசிரியர்களை மிரட்டினார்கள்.
மேலும் மற்ற வகுப்புகளில் சென்று அமர்ந்து ஆசிரியர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி அனைவரையும் தொந்தரவு செய்தனர். இந்தநிலையில் கடந்த வாரம் 3 மாணவர்களும் சேர்ந்து சில ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டினார்கள். இதை ஆசிரியர்கள் கண்டித்த போது மீண்டும் அவர்களை மிரட்டினார்கள்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுபற்றி போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் காதர் மீரான் இது குறித்து ராயபுரத்தில் உள்ள குழந்தை நல அலுவலர் லலிதாவிடம் புகாரை அனுப்பினார். அவர் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார். பின்னர் 3 மாணவர்களையும் கைது செய்து கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினார்.