தமிழ்நாடு

மழையால் பாதிப்பு: ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- த.மா.கா. வலியுறுத்தல்

Published On 2023-02-07 06:33 GMT   |   Update On 2023-02-07 06:33 GMT
  • தமிழக அரசு, மழையினால் சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்.
  • மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல.

தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு அறிவித்துள்ள நிவாரணத்தொகை ரூ.20 ஆயிரம் போதுமானதல்ல என்பதை விவசாயிகளே தெரிவிக்கின்றனர். அதே போல மழையினால் பாதிக்கப்பட்டுள்ள உளுந்து, கடலை உள்ளிட்ட மற்ற பயிர்களுக்கும் விவசாயிகள் அடைந்துள்ள இழப்பீட்டிற்கு ஏற்ப நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மழையினால் நனைந்து நெல்மணிகள் முளைத்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், நெல்மூட்டைகளை பாதுகாக்கவும், நனைந்து வீணாகியுள்ள நெல் மூட்டைகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு, மழையினால் சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News