தமிழ்நாடு செய்திகள்

238 வாக்குச்சாவடிகளிலும் சாமியானா பந்தல் அமைப்பு- வாக்குச்சாவடியை சுற்றி 200 மீட்டர் தூரம் அரசியல் கட்சியினர் வர தடை

Published On 2023-02-25 10:00 IST   |   Update On 2023-02-25 10:00:00 IST
  • வெயிலின் தாக்கம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாக்குசாவடி மையங்கள் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களை சுற்றி அரசியல் கட்சியினருக்கு தடைவிதித்து 200 மீட்டர் தொலைவில் கோடு போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக சாய்வு தளம், அவர்களுக்கு வீல் சேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரோட்டில் காலையில் பனி தாக்கம் இருந்தாலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது.

வெயிலின் தாக்கம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாக்குசாவடி மையங்கள் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களை சுற்றி அரசியல் கட்சியினருக்கு தடைவிதித்து 200 மீட்டர் தொலைவில் கோடு போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த பகுதிக்குள் வெளி நபர்கள் வரக்கூடாது என்பதற்காக கோடு போடப்பட்டு வருகிறது. 33 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது.

இதேபோல் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் வீடியோ மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. இது தவிர நுண்பார்வையாளர்களும் வாக்குப்பதிவை கண்காணிக்கின்றனர்.

Tags:    

Similar News