தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பறக்கும் படையினர் விடிய விடிய வாகன சோதனை

Published On 2023-01-22 11:08 IST   |   Update On 2023-01-22 11:08:00 IST
  • இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் நேற்று முதல் கிழக்கு தொகுதி முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
  • கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகனங்களை தீவிர சோதனை நடத்தினர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா 3 அதிகாரிகளும், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார், ஒரு வீடியோ கிராபர் பணியில் இருப்பார்கள்.

இந்த குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேர முறையில் பணியில் இருப்பார்கள். இதில் முதல் குழுவில் பறக்கும் படை அதிகாரிகளாக சையது முஸ்தபா, பழனிச்சாமி, அருள்மொழிவர்மன், 2-வது குழுவில் கோபால், அசோக்குமார், இளங்கோ, 3-வது குழுவில் சந்திரசேகரன், செந்தில்குமார், சண்முக சுந்தரம் ஆகியோர் உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ள அதிகாரிகள் தனித்தனி குழுவாக செயல்படுவார்கள்.

இதேபோல் 9 அதிகாரிகள் கொண்ட 3 நிலை கண்காணிப்புக்கு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் வெவ்வேறு இடங்களில் கண்காணிப்பு பணிகள் சோதனைகள் மேற்கொள்வார்கள்.

இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் நேற்று முதல் கிழக்கு தொகுதி முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கோண வாய்க்கால், அக்ரஹாரம் போன்ற பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் போன்றவற்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. இன்று காலை கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகனங்களை தீவிர சோதனை நடத்தினர். காரில் செல்பவர்கள் விவரத்தையும் சேகரித்தனர்.

Tags:    

Similar News