தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி நாளை சங்கரன்கோவில் வருகை: உற்சாக வரவேற்பு அளிக்க நிர்வாகிகள் ஏற்பாடு

Published On 2023-10-17 05:22 GMT   |   Update On 2023-10-17 05:22 GMT
  • சென்னையில் இருந்து விமானம் மூலமாக நாளை காலை 11 மணிக்கு தூத்துக்குடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
  • சங்கரன்கோவில்-சேர்ந்தமரம் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சங்கரன்கோவில்:

அ.தி.மு.க. கட்சி தொடங்கி 52-வது ஆண்டு விழா இன்று தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தொடக்க விழாவை பொதுக்கூட்டங்கள் நடத்தியும், நலத்திட்டங்கள் வழங்கியும், கட்சி கொடியேற்றியும் கொண்டாட வேண்டும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக நாளை காலை 11 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லை வழியாக சங்கரன்கோவிலுக்கு செல்கிறார். அப்போது பாளை கே.டி.சி.நகர் மேம்பாலத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

தொடர்ந்து அவர் அங்கிருந்து சங்கரன்கோவிலுக்கு செல்கிறார். அங்கு மாலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக சங்கரன்கோவில்-சேர்ந்தமரம் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News