தமிழ்நாடு

கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Published On 2023-02-05 08:29 GMT   |   Update On 2023-02-05 08:29 GMT
  • மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
  • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்த ஆண்டு தைப்பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலையினை வழங்கி இருந்தால், இந்த தனியார் வழங்கும் இலவச சேலையினை வாங்க ஒரே சமயத்தில் சுமார் 1500 ஏழை மகளிர் குழுமியிருக்க மாட்டார்கள். கூட்ட நெரிசல் காரணமாக அப்பாவி ஏழை மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கவும் மாட்டார்கள்.

நடந்தேறிய இந்தத் துன்ப நிகழ்வுக்குக் காரணமான அதிகாரிகள் மீதும், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசை வலியுறுத்துகிறேன்.

நிர்வாகத் திறனற்ற இந்த அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் காலதாமதத்தாலும், அலட்சியத்தாலும் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்த அரசு அறிவித்த நிவாரணத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

குறித்த காலத்தில் விலையில்லா வேட்டி, சேலையை வழங்காத இந்த திமுக அரசு தான் இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு, இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் நடத்துவதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News