தமிழ்நாடு செய்திகள்

மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு போகாமலேயே இந்தியா முழுவதும் பிரபலமானார்- துரைமுருகன் பேச்சு

Published On 2022-10-09 16:36 IST   |   Update On 2022-10-09 16:36:00 IST
  • அரசியலில் சாணக்கிய தன்மையோடு விளங்கி மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டுக்கு தருவார்.
  • தி.மு.க. தலைவராக பொதுக்குழு தேர்ந்தெடுத்து நம்மை ஆள்வதற்கு நம் இனத்தை ஆள்வதற்கு ஒப்புதல் தந்துள்ளது.

பொதுக்குழுவில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

தி.மு.க.வில் அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் பொதுச் செயலாளராக இருந்துள்ளனர். என்னை 4-வது பொதுச்செயலாளராக உட்கார வைத்திருக்கிற தளபதியே உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன். அண்ணாவுக்கு பிறகு கலைஞர் இந்திய துணை கண்டத்தையே ஆட்டிப்படைக்கின்ற தலைவராக இருந்தார். அவர் நினைத்தவர் தான் ஜனாதிபதியாக வர முடிந்தது. அவர் நினைத்தவர் தான் பிரதமராக வர முடிந்தது.

கலைஞர் கூட முதல்- அமைச்சரான பிறகு டெல்லிக்கு போய் அவர் அரசியல் சாணக்கிய தனத்தை காட்டிய பிறகு தான் அவர் அங்கு பிரபலமானார். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு போகாமல் இங்கு உட்கார்ந்து கொண்டே இந்தியா முழுவதும் பிரபலமான பெருமை தளபதிக்கு மட்டுமே உண்டு.

அவர் இன்னும் அரசியலில் சாணக்கிய தன்மையோடு விளங்கி மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டுக்கு தருவார். இந்த கழகம் மேலும் மேலும் வளருவதற்கு உறுதுணையாக இருப்பார். அவருக்கு உறுதுணையாக ஆலோசனை சொல்ல அவரோடு இருந்து பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தளபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பேசியதாவது:-

அன்புத்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை 2-வது முறையாக தி.மு.க. தலைவராக பொதுக்குழு தேர்ந்தெடுத்து நம்மை ஆள்வதற்கு நம் இனத்தை ஆள்வதற்கு ஒப்புதல் தந்துள்ளது.

பொதுக்குழுவில் உள்ள அத்தனை பேரும் ஒன்றாகவே சிந்தித்து இவர்தான் தலைவர், இவர்தான் பொதுச்செயலாளர், இவர் தான் பொருளாளர் என்று ஒரே மாதிரியாக முடிவு எடுத்து உள்ளனர். இந்த இயக்கத்தை ஒற்றுமையாக கொண்டு செல்ல நம் தலைவர்தான் தகுதியானவர்.

இங்கே தம்பி உதயநிதி பேசும்போது எல்லாமே அப்பாதான் என கூறிவிட்டு சென்றார். உங்களுக்காக மூத்தவர்கள் எங்களை போன்றோர் உதவி செய்ய காத்திருக்கிறோம். எதிர்காலத்தில் இளைஞரணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வருங்காலம் உங்கள் கையில் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்குழுவில் கே.என்.நேரு பேசியதாவது:-

நீங்கள் கழக தோழர்கள் யாரையும் மறவாமல் நினைவில் கொண்டு எந்தெந்த நேரத்தில் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மறக்காமல் செய்கின்ற மாபெரும் தலைவராக கலைஞருக்கு பிறகு நீங்கள் திகழ்கிறீர்கள். நாங்கள் பல இடங்களில் பார்த்து இருக்கிறோம்.

கழகத்தில் ஒவ்வொருவரின் உணர்வையும் புரிந்து கொண்டு இருக்கின்ற தலைவர் நீங்கள். நாங்கள் கலைஞருடன் நீண்டகாலம் பயணித்து இருக்கிறோம். உங்களோடும் நீண்டகாலம் பயணித்து இருக்கிறோம்.

தலைவர் என்ன நினைப்பார் என்று நாங்கள் முகத்திலேயே தெரிந்து கொள்வோம். தலைவருக்கு பிறகு அவரை விஞ்சிய தலைவராக அனைவரையும் அரவணைக்கும் தலைவராக அனைவரிடமும் வாஞ்சையோடு பழகுகிற தலைவராக நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் பணியை முதன்மை பணியாக தட்டாமல் செய்யும் வகையில் நாங்கள் இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News