ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெல்லும்- துரை வைகோ பேட்டி
- தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க. இன்றைக்கு இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் புகையிலை பயன்பாட்டுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மதுரை:
திருமலை நாயக்கரின் 440-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது உருவச் சிலைக்கு ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் பாரம்பரியம் வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு ஈரோட்டில் வாக்காளர் ஆதரவு அதிகரித்து வருகிறது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வெல்லும்.
தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க. இன்றைக்கு இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த கட்சியை உடைத்ததில் பாரதிய ஜனதாவுக்கு பெரும் பங்கு உண்டு. இன்றைக்கு அவர்களே அ.தி.மு.க.வை ஒன்றுபடுத்துவோம் என்று பேசுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
தமிழகத்தில் புகையிலை, குட்காவுக்கான தடையை விலக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் புகையிலை பயன்பாட்டுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.