தமிழ்நாடு

காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் அலை மோதிய கூட்டம்

Published On 2024-01-17 05:07 GMT   |   Update On 2024-01-17 05:16 GMT
  • இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.
  • அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.

சேலம்:

சேலம் குரும்பப்பட்டியில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.

மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளன. குறிப்பாக வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு வருவார்கள். சிறியவர்களுக்கு கட்டணமாக 10 ரூபாயும், பெரியவர்களுக்கு கட்டணமாக 50 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது.

காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே பூங்காவிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பூங்காவை சுற்றி பார்த்ததுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள் மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்தனர்.

மேட்டூர் அணை பூங்காவுக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி அணை முனியப்பனை தரிசனம் செய்தனர்.

பின்னர் சமைத்து எடுத்து வந்த உணவை குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர். சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வழக்கமாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

தொடர்ந்து அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வ ராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் கடைகளிலும் வியாபாரம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு திரண்டதால் கூட்டம் அலை மோதியது.

Tags:    

Similar News