தமிழ்நாடு

பழவேற்காட்டில் ரூ.400 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

Published On 2022-07-09 06:30 GMT   |   Update On 2022-07-09 06:30 GMT
  • மீன்பிடித் துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
  • தமிழக மீன்வளத்துறை சார்பில் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பொன்னேரி:

பொன்னேரிஅடுத்த, பழவேற்காட்டில் 16 குப்பங்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்று விட்டு முகத்துவாரம் வழியாக கரை திரும்பும் படகுகளை மீனவர்கள் பல ஆண்டுகளாக உப்பங் கழி ஏரிக்கரையில் நிறுத்தி வருகின்றனர். காமராஜர், அதானி துறைமுகம் ஆகியவற்றின் வருகையால் கடலும், ஏரியும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுக்கள் உருவாகி இயல்புநிலை நீரோட்டத்தில் தடை ஏற்பட்டு ஏரியில் நீர் கொந்தளிப்பு ஏற்படும் போது கரையோரம் நிறுத்தப்படும் படகுகள், மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதம் அடைந்து வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் மீன்பிடித் துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

அதன் அடிப்படையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரங்கம் குப்பம்-வைரவன் குப்பம் இடையே 500 மீட்டர் இடைவெளியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, தேசிய வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக தமிழக மீன்வளத்துறை சார்பில் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் அப்பகுதி மீனவர்களின் எதிர்ப்பால் மாற்று இடத்தில் மீன் பிடி துறைமுகம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் அங்குள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

பெரும்பாலான மீனவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடம் பாதுகாப்பானது அல்ல என்பதால், கூனங்குப்பம் வடக்கு பகுதியில் மீன் பிடி துறைமுக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. கூறுகையில்:-

மீனவர்களின் கருத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மீன்பிடி துறைமுகத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News