தமிழ்நாடு

பறக்கும் ரெயிலை சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கினால் எளிதாக பஸ் விட முடியும்- அதிகாரிகள் தகவல்

Update: 2023-06-03 08:53 GMT
  • சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
  • மாநகர போக்கு வரத்து கழக அதிகாரிகள் மாநகர பஸ்களை சேப்பக்கத்துக்கு திருப்பி விடுவது கடினம் என்று கூறியுள்ளனர்.

சென்னை:

சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால் ஜூலை 1-ந்தேதி முதல் 2024 ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. இதனால் வேளச்சேரியில் இருந்து வரும் பறக்கும் ரெயில்கள் சேப்பாக்கத்தில் நிறுத்தப்படுகின்றன. சேப்பாக்கம்-வேளச்சேரி இடையே திருத்தி அமைக்கப்பட்ட ரெயில் அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

எனவே பயணிகளின் வசதிக்காக சேப்பாக்கத்தில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் மாநகர போக்கு வரத்து கழக அதிகாரிகள் மாநகர பஸ்களை சேப்பக்கத்துக்கு திருப்பி விடுவது கடினம் என்று கூறியுள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

பறக்கும் ரெயிலை சேப்பாக்கத்தில் நிறுத்துவதால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் 100-க்கணக்கான பஸ்களை சேப்பாக்கத்துக்கு திருப்பி விடுவது கடினம்.

சேப்பாக்கத்துக்கு பதிலாக பறக்கும் ரெயிலை சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கினால் அங்கிருந்து அருகில் உள்ள பாரிமுனை பஸ் நிலையத்துக்கு செல்ல 100-க்கணக்கான பஸ்கள் உள்ளன. மேலும் பயணிகள் சிறிது தூரம் நடந்து சென்றால் சிம்சன் பஸ் நிலையத்தில் இருந்து சாலிகிராமம்-பாரிமுனை, கோயம்பேடு- மெரினா இடையே செல்லும் பஸ்களில் ஏறி பயணம் செய்யலாம். இதன் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் அண்ணா சதுக்கத்தை எளிதில் அடையலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "பறக்கும் ரெயில்களை சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்குவது தொடர்பாக பரிசீலித்தோம். ஆனால் சிந்தாதிரிப்பேட்டைக்கு ரெயில்களை இயக்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன" என்றார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கழகம் அடுத்த வாரம் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளது. இதில் ஆேலாசனை செய்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதற்கிடையே சேப்பாக்கத்தில் பறக்கும் ரெயில் நிறுத்தப்பட்டால் மெட்ரோ ரெயில் நிலையத்தை போல ஷேர் ஆட்டோக்கள் அல்லது பைக் டாக்சிகளை இயக்க வேண்டும் என்று ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News