தமிழ்நாடு

பறக்கும் ரெயிலை சேப்பாக்கத்துக்கு பதிலாக பூங்கா வரை இயக்க ஆலோசனை

Published On 2023-06-02 07:43 GMT   |   Update On 2023-06-02 09:22 GMT
  • சென்னை கடற்கரை- எழும்பூர் 4-வது புதிய ரெயில் பாதை முக்கியமானதாக உள்ளது. இதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம்.
  • பறக்கும் ரெயில் சேப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டால் அங்கிருந்து சென்ட்ரல், பாரிமுனை மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

சென்னை:

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4-வது புதிய பாதை அமைக்கும் திட்டத்துக்கு நடப்பாண்டில் மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த புதிய ரெயில் பாதை திட்டப் பணிகளை விரைவில் தொடங்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் 4-வது வழித்தட பணிகளுக்காக, சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வேளச்சேரி - கடற்கரை இடையே இயக்கப்படும் பறக்கும் மின்சார ரெயில்கள் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு சேப்பாக்கம் வரை மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்ததும் பறக்கும் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் வழித்தடம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் பரங்கிமலையில் இருந்து இனி நேரடியாக கடற்கரை பகுதிக்கு செல்லலாம் என்று காத்திருந்தோம். 12 ஆண்டுகள் காலதாமதத்துக்கு பிறகு நேரடி ரெயில் இணைப்பை பெற இருந்தோம். பறக்கும் ரெயில் சேப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டால் அங்கிருந்து சென்ட்ரல், பாரிமுனை மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே பறக்கும் ரெயிலை பூங்கா ரெயில் நிலையம் வரையிலாவது இயக்க வேண்டும்" என்றனர்.

இந்த நிலையில் ரெயில் பயணிக்கு பாதிப்பு இல்லாமல் பணிகளை மேற்கொள்வது மற்றும் ரெயில் சேவை வழங்குவது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் தெற்கு ரெயில்வே அதிகாரிகளும், மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை கடற்கரை- எழும்பூர் 4-வது புதிய ரெயில் பாதை முக்கியமானதாக உள்ளது. இதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம். பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல், வேளச்சேரி பறக்கும் ரெயில்களை சிந்தாதிரிப்பேட்டை அல்லது பூங்கா வரை இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

பூங்கா வரை பறக்கும் ரெயில் இயக்கப்பட்டால் பயணிகள் தாம்பரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களில் ஏறி தாங்கள் போக விரும்பும் இடத்துக்கு செல்ல வசதியாக இருக்கும். எனவே பறக்கும் ரெயிலை பூங்கா வரை இயக்குவது பற்றியே ஆலோசித்து வருகிறோம். பயணிகளின் வசதி கருதி இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News