தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்- சீல் வைக்கப்பட்ட காப்பகத்தில் இருந்து திருடியது அம்பலம்

Published On 2022-12-16 11:34 IST   |   Update On 2022-12-16 11:34:00 IST
  • போலீசார் சிலைகளை எங்கிருந்து கடத்தி வந்தார்கள் என்று விசாரணை நடத்திய போது சிலைகளை திருடியுள்ளது தெரியவந்தது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் பி.என். ரோடு சாந்தி தியேட்டர் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போலீசாரை பார்த்ததும் நின்றிருந்த 2பேரில் ஒருவர் தப்பியோடினார்.

உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ் (வயது 35) என்பதும், தப்பியோடிய நபர் தன்னிடம் அய்யப்பன், விநாயகர் ஆகிய 2 சாமி சிலைகளை கொடுத்து, விற்று தருமாறு கேட்டுக்கொண்டார் என தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அப்பாசை கைது செய்து அவரிடமிருந்த பித்தளையால் ஆன 1½ அடி உயர அய்யப்பன் சிலை மற்றும் விநாயகர் சிலை ஆகிய சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய நபர் யாரென்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து போலீசார் சிலைகளை எங்கிருந்து கடத்தி வந்தார்கள் என்று விசாரணை நடத்திய போது சிலைகளை திருடியுள்ளது தெரியவந்தது.

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் உள்ளது. இந்த காப்பகத்தில் தங்கியிருந்து படித்து வந்த 3 மாணவர்கள் சமீபத்தில் காப்பகத்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட போது உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் 2 மாதங்களாக காப்பகம் மூடப்பட்டுள்ளது.

இதனை நோட்டமிட்டு அங்கிருந்த அய்யப்பன், விநாயகர் சிலைகளை அப்பாஸ் மற்றும் அவரது நண்பர் ஆகிய 2பேரும் சேர்ந்து திருடியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News