தமிழ்நாடு

சின்னசேலம் அருகே விபத்து: மினி லாரி மீது தனியார் சொகுசு பஸ் மோதி 2 பேர் பலி

Published On 2023-12-31 05:08 GMT   |   Update On 2023-12-31 05:08 GMT
  • பஸ்சில் பயணம் செய்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்றவர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு விபத்துக்குள்ளான வாகனத்தில் இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • விபத்து குறித்து கீழ்க்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னசேலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வி.கூட்ரோட்டில் மினி லாரி ஒன்று இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூருக்கு இன்று அதிகாலை சென்றது.

இந்த மினிலாரியை வரஞ்சரம் அருகேயுள்ள இய்யனூர் கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 47) ஓட்டி சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (40), மருதை (28) ஆகியோரும் வந்தனர்.

மினிலாரி சின்னசேலம் அருகே வி.கிருஷ்ணப்புரம் அருகே இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்த போது, வேளாங்கண்ணியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு சென்ற தனியார் சொகுசு பஸ் மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மினி லாரியின் முன்பகுதி நொறுங்கி, சாலையோர பள்ளத்தில் இறங்கியது. சொகுசு பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது.

பஸ்சில் பயணம் செய்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்றவர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு விபத்துக்குள்ளான வாகனத்தில் இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியின் டிரைவர் குமார், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி கிடந்தனர். மேலும், அதிலிருந்த மருதை படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியிருந்தார்.

மேலும், சொகுசு பஸ்சின் டிரைவர் நாகை மாவட்டம் அரும்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (29), அதே ஊரைச் சேர்ந்த ஜெயசீலன் (33), பெங்களூருவை சேர்ந்த பானு (48), தேவி (68), அருண் (8), சரண் (5) ஆகியோரும் படுகாயமடைந்தனர். இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தினால் கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விபத்து குறித்து கீழ்க்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News