முக சிதைவுக்கான அறுவை சிகிச்சை: சிறுமி தானியாவிடம் போனில் நலம் விசாரித்தார் முதலமைச்சர்
- சவீதா மருத்துவமனையில் சிறுமி தானியா கடந்த அக்டோபர் மாதம் அனுமதிக்கப்பட்டார்.
- முகச்சிதைவை சரிசெய்ய பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை:
ஆவடியை அடுத்த வீராபுரம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது 9 வயது மகள் தானியா. இவருக்கு ஒருபக்க கன்னம் முழுவதும் சிதைய தொடங்கியதால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். தனது நிலை குறித்து வீடியோவிலும் பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்து மனவேதனை அடைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே அமைச்சர் சா.மு.நாசரை அழைத்து அந்த மாணவிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கூறினார்.
உடனே சிறுமியின் வீட்டுக்கு சென்று அமைச்சர் சா.மு.நாசர் முழு விவரங்களையும் கேட்டறிந்து அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தார்.
அதன்படி சவீதா மருத்துவமனையில் சிறுமி தானியா கடந்த அக்டோபர் மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு முகச்சிதைவை சரிசெய்ய பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்து சிறுமி வீடு திரும்பும் வரை அமைச்சர் நாசர் உடன் இருந்து கவனித்துக்கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது கோவில், பள்ளிக்கூடம், கடை வீதி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் சிறுமி மகிழ்ச்சியாக சென்று வருகிறார்.
இந்த நிலையில் அறுவை சிகிச்சையின் போது வாய் பகுதியில் பொருத்தப்பட்ட உபகரணங்களை எடுக்க 2-ம் கட்டமாக மீண்டும் அறுவை சிகிச்சைக்காக சிறுமி தானியா சவீதா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அந்த சிறுமியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று நலம் விசாரித்தார்.