தமிழ்நாடு செய்திகள்

சென்னை விமானநிலையத்தில் மாரடைப்பால் மயங்கி விழுந்த முதியவரை காப்பாற்றிய அதிகாரிகள்

Published On 2022-09-26 12:35 IST   |   Update On 2022-09-26 12:35:00 IST
  • மேற்குவங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் சேகர் ஹஸ்ரா.
  • தன் உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.ஐ.எப் அதிகாரிகளுக்கு சேகர் ஹஸ்ரா நன்றியை தெரிவித்தார்.

ஆலந்தூர்:

மேற்குவங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் சேகர் ஹஸ்ரா (69). இவர் இருதய நோயாளி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தார்.

அப்போது விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து வெளியே செல்லும் போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். இதை கண்ட சி.எஸ்.ஐ.எப் வீரர்கள், தங்களுடைய மேல் அதிகாரிகளுக்கும் விமான நிலைய மருத்துவர்களுக்கும் தகவல் அளித்தனர்.

டாக்டர்கள் அவருக்கு இருதய துடிப்பை மீண்டும் உயிர்த்தெழ செய்யும் சி.பி.ஆர். சிகிச்சை அளித்தனர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இருதய துடிப்பும் வெகுவாக குறைந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

ஆனால் அங்கு இருந்த சி.எஸ்.ஐ.எப் அதிகாரிகள் எட்வின் சாம், வைகுண்டம் ஆகியோர் அந்த பயணியை காப்பாற்ற தொடர்ந்து அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளித்தனர். இதில் அவருக்கு மீண்டும் சுய நினைவு திரும்பியது.

இதையடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவருடைய உடல் நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தன் உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.ஐ.எப் அதிகாரிகளுக்கு சேகர் ஹஸ்ரா நன்றியை தெரிவித்தார். அதுமட்டுமின்றி துரிதமாக செயல்பட்டு பயணி உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.ஐ.எப் வீரர்களை ஐ.ஜி ஸ்ரீராம் உள்பட மேல் அதிகாரிகள் பாராட்டினர்.

Similar News