தமிழ்நாடு

அன்பு ஜோதி ஆசிரம இணையதளம் முடக்கம்- சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

Published On 2023-02-24 03:38 GMT   |   Update On 2023-02-24 03:38 GMT
  • அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின் பேபி ஆசிரமத்தின் பேரில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தை ஆரம்பித்து தான் ஆசிரமத்தில் செய்யும் சேவைகளை படங்களுடன் வெளியிட்டு வந்துள்ளார்.
  • பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஜூபின் பேபி கைது செய்யப்பட்டு ஆசிரமமும் மூடப்பட்ட நிலையில் ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சிபி.சி.ஐ.டி போலீசார் முடக்கினார்கள்.

விக்கிரவாண்டி:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அன்பு ஜோதி ஆசிரமத்தை நடத்தி வந்தார்.

இந்த ஆசிரமத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த ஜபருல்லாகாணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10-ந்தேதி கெடார் போலீசார், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆசிரமத்தில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த ஜபருல்லா உள்பட 11-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது என பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேலு மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதற்கிடையே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தாக்கல் செய்த ஆவணங்களை விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின் பேபி ஆசிரமத்தின் பேரில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தை ஆரம்பித்து தான் ஆசிரமத்தில் செய்யும் சேவைகளை படங்களுடன் வெளியிட்டு வந்துள்ளார்.

மேலும் பலரிடம் நிதி உதவிகளையும் இணையதளம் மூலம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஜூபின் பேபி கைது செய்யப்பட்டு ஆசிரமமும் மூடப்பட்ட நிலையில் ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சிபி.சி.ஐ.டி போலீசார் முடக்கினார்கள்.

Tags:    

Similar News