தமிழ்நாடு

கடந்த தேர்தலில் கை நழுவிய 160 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா தனி வியூகம்

Update: 2023-03-13 09:06 GMT
  • 160 தொகுதிகளுக்கான பிரசாரங்கள், செலவுகள் மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதிகளில் பிரசாரம் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
  • கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். அனைத்து தொகுதிகளிலும் திட்டமிட்டு தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை:

அடுத்த ஆண்டு வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே பா.ஜனதா தயாராகிவிட்டது. பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே பல மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

வழக்கமாக கையில் இருக்கும் தொகுதிகளை தக்க வைப்பதில்தான் எல்லா கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தும். ஆனால் பா.ஜனதா கடந்த தேர்தலில் கை நழுவிய 160 தொகுதிகளை கையில் எடுத்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

வருகிற தேர்தலில் இந்த தொகுதிகளை கைப்பற்றிட தேவையான திட்டங்களை வகுத்துள்ளார்கள். 80 தொகுதிகளை அமித் ஷாவும், 80 தொகுதிகளை ஜே.பி.நட்டாவும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளார்கள். அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக தேசிய பொதுச்செயலாளர்கள் சுனில் பன்சல், வினோத் தாவ்தே, தருண்சுக் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

இந்த தொகுதிகளை அதிகபட்சமாக 5 தொகுதிகள் கொண்ட தொகுப்புகளாக பிரித்துள்ளார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் பிரதமர் மோடியை அழைத்து பிரமாண்ட பேரணிகள், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாக்கள் நடத்த முடிவு செய்துள்ளன. இதன்படி 45 முதல் 55 பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர இந்த 160 தொகுதிகளுக்கும் தேர்தலுக்கு முன்பாக மத்திய மந்திரிகள், மூத்த தலைவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்று மக்களை சந்திப்பார்கள். அந்த தொகுதிகளின் கள நிலவரத்தை நேரில் பார்த்து வெற்றிக்கு சாதகமான சூழலை உருவாக்குவார்கள். இதற்காக இந்த தொகுதிகளின் பிரச்சினைகள் முன்கூட்டியே ஆய்வு செய்யப்படுகின்றன.

தேர்தல் நேரத்தில் இந்த 160 தொகுதிகளுக்கான பிரசாரங்கள், செலவுகள் மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதிகளில் பிரசாரம் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பிரசாரம் செய்ய, தேர்தல் அறிக்கை தயார் செய்ய, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று 45 குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்க நிர்மலா சீதாராமன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமித் ஷா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் சுமூகமாக பேசி தொகுதி ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு அமித் ஷாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். அனைத்து தொகுதிகளிலும் திட்டமிட்டு தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News