கரடி முட்டைகளை உடைத்து குடித்ததால் கடை முழுவதும் முட்டை ஓடுகளாக கிடக்கும் காட்சி.
மஞ்சூர் அருகே டீக்கடைக்குள் புகுந்து முட்டைகளை உடைத்து குடித்த கரடி
- நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- கடையில் இருந்த முட்டைகள் அனைத்து உடைந்து சிதறி கிடந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வனத்தை விட்டு வெளியே வரும் கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதுடன், வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து வீசி சூறையாடி வருகிறது.
மேலும் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களை எடுத்து சாப்பிட்டு விட்டு செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர்.
மஞ்சூர் அருகே கண்டி பகுதியை சேர்ந்தவர் சசி. இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்ததும் அவர் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அதிகாலை டீக்கடையை திறப்பதற்காக சசி கடைக்கு வந்தார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த முட்டைகள் அனைத்து உடைந்து சிதறி கிடந்தது. நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த கரடி கடையை உடைத்து உள்ளே நுழைந்து முட்டையை உடைத்து குடித்து சென்றது தெரியவந்தது.
100க்கு மேற்பட்ட முட்டைகளை கரடி உடைத்து குடித்துள்ளது. இதுகுறித்து சசி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தொடர்ந்து இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே டீக்கடைகளை குறிவைத்து கரடிகள் தாக்கும் சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.