தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் அண்ணாமலை 4 நாட்கள் நடைபயணம்: உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு

Published On 2023-08-03 13:20 IST   |   Update On 2023-08-03 13:20:00 IST
  • பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகிறார்.
  • அண்ணாமலை நடைபயணம் செல்லும் பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதா கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மதுரை:

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அவர் நடைபயணம் செய்து வருகிறார்.

ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதே போன்று குழந்தைகளுடன் செல்பி எடுத்தும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றும் வந்தார்.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நாளை மறுதினம் (5-ந்தேதி) முதல் 4 நாட்கள் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபயணம் செல்ல உள்ளார். இந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மதுரை பா.ஜனதா கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதி ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை பழைய நத்தம் ரோடு, போலீஸ் குடியிருப்பு, சொக்கிகுளம், கிருஷ்ணாபுரம் காலனி, மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகம், உழவர் சந்தை, பி.பி. குளம் சந்திப்பு, லேடி டோக் கல்லூரி, செல்லூர் 50 அடி ரோடு வந்தடைகிறார்.

5-ந்தேதி மாலை 4 மணிக்கு பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலையில் இருந்து நேதாஜி ரோடு, கட்ராபாளையம், ஜான்சி ராணி பூங்கா, நேதாஜி சிலை, நகைக்கடை பஜார், கிழக்கு மாசி வீதி, கீழவாசல், முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை, கீழச்சந்தை பேட்டை, குருவிகாரன்சாலை பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

7-ந்தேதி மாலை 4 மணிக்கு ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இருந்து ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஏ.ஏ.ரோடு, தமிழ்நாடு வேதாகம கல்லூரி, காளவாசல், சம்மட்டிபுரம், சொக்கலிங்க நகர் வழியாக பழங்காநத்தம் வரை நடைபயணம் செல்கிறார்.

பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

8-ந்தேதி காலை 9 மணிக்கு திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நுழைவாயில், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் பஸ் நிறுத்தம், 16 கால் மண்டபம் மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் நடைபயணம் செல்கிறார்.

இந்த நிலையில் அண்ணாமலை நடைபயணம் செல்லும் பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதா கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News