தமிழ்நாடு

விராலிமலை அருகே இன்று காலை விபத்து: பஸ்சுக்காக காத்திருந்த கணவன்-மனைவி பலி

Published On 2022-07-03 05:36 GMT   |   Update On 2022-07-03 05:36 GMT
  • புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விராலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்.
  • தினமும் காலையிலேயே இவர்கள் இருவரும் ஒன்றாக வேலைக்கு புறப்பட்டு செல்வார்கள்.

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விராலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 50), பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். விராலூர் அ.தி.மு.க. கிளைச் செயலாளராகவும் இருந்தார்.

இவரது மனைவி கல்யாணி (45). இவரும் கட்டிட சித்தாள் வேலைக்கு செல்வது வழக்கம். இந்த தம்பதிக்கு 4 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 3 மகள்களின் படிப்பு, திருமணம், குடும்ப செலவை சமாளிக்கவே இருவரும் வேலைக்கு சென்று வந்தனர்.

தினமும் காலையிலேயே இவர்கள் இருவரும் ஒன்றாக வேலைக்கு புறப்பட்டு செல்வார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் செல்வத்துக்கு வேலை இல்லை.

ஆனால் அவரது மனைவி கல்யாணி திருச்சிக்கு வேலைக்கு செல்ல தயாராகினார். இதனால் அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். இதையடுத்து வீட்டில் இருந்து புறப்பட்ட அவர்கள் விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலை விராலூர் பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக திருப்பதியில் இருந்து மதுரை நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் சாலையோரம் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த தம்பதியினர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் அவர்கள் மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் ஓட்டுநர் மதி (45) மற்றும் காரில் இருந்த பழனியப்பன் (52), அவரது மனைவி சித்ரா (44), மகள் சரண்யா (23) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு சென்ற மனைவியும், அவரை அனுப்பி வைக்க சென்ற கணவரும் விபத்தில் பலியானது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோரை இழந்து நிர்கதியான அவர்களது மகள்கள் 4 பேரும் கதறித்துடித்தது காண்போரை கண்கலங்க வைத்தது

Tags:    

Similar News