தமிழ்நாடு செய்திகள்

அரங்கத்தின் தொழில்நுட்பம், இணையதள இணைப்பு உள்ளிட்ட அனைத்து வரைபட ஆவணங்களையும் ஆய்வு


மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா, அங்கேரி வீரர்கள் 6 பேர் சென்னை வந்தனர்

Published On 2022-07-23 12:20 IST   |   Update On 2022-07-23 12:20:00 IST
  • மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது.
  • செஸ் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் சென்னை வரத் தொடங்கினார்கள்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர், நடுவர்கள், செஸ் கூட்டமைப்பினர் என 3 ஆயிரம் பேர் வருகிறார்கள். அவர்கள் இன்று முதல் வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

இந்த நிலையில் ரஷ்ய செஸ் கூட்டமைப்பினர் மற்றும் அவர்களுடன் வேறு சில நாட்டவர்களும் 'செஸ் ஒலிம்பியாட்' நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

இவர்கள் வெளிநாட்டு வீரர்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் போர்டு, இணையதள வசதி, அரங்கத்தின் குளிர் அளவு, மின்தடை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு, பயணம் செய்யும் வாகனம், நிறுத்தும் இடங்கள், சி.சி.டி.வி கேமரா பகுதிகள், உலக நாடுகளின் நேரம் காட்டும் கடிகாரம் அமைப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட முன் ஏற்பாடுகள் குறித்து இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செஸ் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் சென்னை வரத் தொடங்கினார்கள். இன்று காலை ஆஸ்திரேலியாவில் இருந்து 4 வீரர்களும், அங்கேரியில் இருந்து 2 வீரர்களும் என 6 பேர் சென்னை வந்தனர்.துபாய் விமானத்தில் அவர்கள் சென்னை வந்திறங்கினார்கள்.

இன்று சென்னை விமான நிலையம் வந்த வெளிநாட்டு வீரர்கள் முதலில் பாதுகாப்பாக அவர்கள் தங்கும் விடுதிக்கு செல்கிறார்கள். பின்னர் 28-ந் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அணிவகுப்பு நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டு அதற்கு தயாராக உள்ளனர்.

அந்தந்த நாடுகளில் பயண நேரத்திற்கு ஏற்ப, வரும் 27-ந் தேதிக்குள் அனைத்து நாட்டு வீரர்கள் வர உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையம், வீரர்கள் தங்கும் ஓட்டல், சென்னை நேரு விளையாட்டு அரங்கம், மாமல்லபுரம் போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News