ஆந்திராவில் உள்ள கோனே அருவி அருகே கணவனால் குத்தி வீசப்பட்ட இளம்பெண் பிணமாக மீட்பு
- கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ்ச்செல்வி திடீரென மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனிடம் விசாரணை நடத்தினர்.
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர், நேதாஜி நகரை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி தமிழ்ச் செல்வி (வயது19). இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ்ச்செல்வி திடீரென மாயமானார். ஆனால் இதுபற்றி மதன் வெளியில் சொல்லவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த தமிழ்ச்செல்வியின் தாய் பல்கீஸ் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், காதல் மனைவி தமிழ்ச்செல்வியை ஜூன் மாதம் 26-ந்தேதி ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ள கோனே அருவிக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட தகராறில் அவளை கத்தியால் குத்திவிட்டு தப்பி வந்துவிட்டதாகவும் திடுக் கிடும் தகவலை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செங்குன்றம் போலீசார் ஆந்திர மாநிலம் நாராயண வனம் போலீசாருடன் இணைந்து கோனே அருவி உள்ள வனப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால் தமிழ்ச்செல்வி குறித்து எந்த தகவலும் தெரியாமல் இருந்தது.
ஆனால் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் தமிழ்ச்செல்வியை மதன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் கோனே அருவி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் மீண்டும் நேற்று அந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்குள்ள காய்ந்த மரக்கிளை மற்றும் இலைகளால் மூடப்பட்டு கிடந்த இடத்தில் உடல் அழுகிய நிலையில் தமிழ்ச் செல்வி பிணமாக கிடந்தார்.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்ச் செல்வி மாயமான அன்று அணிந்து இருந்த உடையை வைத்து அவரது உடலை பெற்றோர் அடையாளம் காட்டினர்.
இதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வி கொலை தொடர்பாக மதனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து இந்த கொலையை செய்து இருப்பது தெரிந்தது.
கடந்த ஜூன் 26-ந்தேதி மதன், மனைவி தமிழ்ச் செல்வியை கோனே ஏரிக்கு அழைத்து செல்வது குறித்து ஏற்கனவே தனது நண்பர்கள் 2 பேருக்கு தெரிவித்து இருந்தார். அவர்கள் தனித் தனியாக முன்னதாகவே கோனே அருவி பகுதிக்கு வந்து உள்ளனர்.
அருவி அருகே உள்ள வனப்பகுதியில் மதன், தமிழ்ச்செல்வி மற்றும் மதனின் நண்பர்கள் 2 பேர் ஆகியோர் சேர்ந்து இருந்த போது தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த மதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி தமிழ்ச்செல்வியை குத்தி கொலை செய்து உள்ளார். பின்னர் உடலை அங்கே போட்டுவிட்டு அதன் மேல் காய்ந்த மர இலைகள், கம்புகளை போட்டு விட்டு எதுவும் தெரியாதது போல் வந்து நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மதனின் நண்பர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதனும், தமிழ்ச்செல்வியும் தனியாக இருந்த போது மதனின் நண்பர்கள் எதற்காக அங்கு சென்றனர். என்றும் விசாரணை நடக்கிறது. பாலியல் ரீதியான பிரச்சினையால் தமிழ்ச்செல்வி தீர்த்து கட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழ்ச்செல்வியின் உடல் கோனே அருவி அருகே வன பகுதியில் மீட்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அவரது கணவர் மதன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. தமிழ்ச்செல்வி இறந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆவதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை பெற்றோர் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினர்.
இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே மதன் கத்தியை எடுத்துச் சென்று உள்ளார். இந்த கொலை தொடர்பாக நாராயண வனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்ச்செல்வி மாயமானது தொடர்பாக அவரது பெற்றோர் ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
காதல் மனைவியை அருவிக்கு சுற்றுலா அழைத்துச்சென்று கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.