பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
- ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.
- தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. அணையின் நீர்மட்டம் 105 அடி உயரம் ஆகும். அணையில் 32.8 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இது தவிர பல்வேறு குடிநீர் திட்ட பணிகளும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 5-ந் தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.
ஆற்றில் அதிகபட்சமாக 25 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட கால்வாய் மூலம் இரட்டை படை மதகுகள், ஒற்றை படை மதகுகள், சென்னசமுத்திரம் கால்வாய் மதகுகளில் நன்செய் முதல் போக பாசனத்துக்காக அமைச்சர் முத்துசாமி இன்று காலை தண்ணீர் திறந்து வைத்தார்.
இதன் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது முதல் கட்டமாக கீழ்பவானி அணையில் இருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்று மாலை 2 ஆயிரத்து 300 கன அடி திறக்கப்படும் என்றும், இன்று முதல் 120 நாட்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்ட போது வாய்க்காலில் ஏற்பட்ட கரை உடைப்பின் காரணமாக தண்ணீர் முழுவதுமாக வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது குறைந்த அளவே அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரினால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றால் தொடர்ந்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, கணேசமூர்த்தி எம்.பி., முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.