தமிழ்நாடு செய்திகள்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
- வேகமாக வந்த மினி வேனை சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரி தேவேந்திரன் உட்பட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
- பீடி இலைகளுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தூத்துக்குடி மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக வந்த மினி வேனை சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரி தேவேந்திரன் உட்பட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலைகள் இருப்பதும், இதனை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது.
இதையடுத்து வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி ஆரேக்கியபுரத்தைச் சேர்ந்த ஆதவன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், பீடி இலைகளுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.