தமிழ்நாடு

கோடை வெயில் கொளுத்துவதால் சென்னையில் கண் நோய் பாதிப்பு அதிகரிப்பு

Published On 2024-04-01 10:22 GMT   |   Update On 2024-04-01 10:22 GMT
  • கோடை காலத்தில், உலர்விழி, கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன.
  • இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

சென்னை:

கோடை காலம் தொடங்கியதையடுத்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் கண் நோய்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் கண் அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையிலும் கண் அழற்சி பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், கண் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கண் மருத்துவர்கள் கூறியதாவது:-

கோடை காலத்தில், உலர்விழி, கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன. கண்களில் போதிய ஈரத்தை தக்க வைப்பதற்கான கண்ணீர் சுரக்காதபோது உலர் விழி பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு சொட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

தற்போது இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கண் இமைக்கு உள்ளே அமைந்திருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்போது இத்தகைய பாதிப்பு உருவாகிறது. இதனால் அசுத்தமான கைகளால் கண்களை தொடக்கூடாது. சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சு பல கண் நோய்களை விளைவிக்கும். இத்தகைய பாதிப்பைத் தவிர்க்க சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடிகளை அணியலாம். கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தை குறையாமல் பாதுகாக்கும் இயற்கை பானங்களை அருந்த வேண்டும். செல்போன்கள், கம்ப்யூட்டர் திரைகளை தொடர்ந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News