தமிழ்நாடு

மத நல்லிணக்கம்: ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

Published On 2024-02-18 13:56 GMT   |   Update On 2024-02-18 13:56 GMT
  • 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர்
  • நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்த பழமையான கோயிலை சுமார் 7 கோடி ரூபாய் செலவில் புரணமைக்கும் பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர். அதன்படி கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் 19-ம் தேதி வரை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாகலூர் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இதில், ஒரு லட்சம் ரூபாய் பணம், பட்டுச்சேலை, பழங்கள், இனிப்புகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். பாகலூர் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருப்பதை போல நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News