தமிழ்நாடு செய்திகள்

உலக தண்ணீர் தினத்தையொட்டி இன்று 1,159 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்

Published On 2023-03-22 16:25 IST   |   Update On 2023-03-22 16:25:00 IST
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 274 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.
  • இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்:

உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மொத்தம் 1159 கிராமங்களில், கிராமசபை கூட்டம் அந்தந்த தலைவர்கள் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடந்தது. இதில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

வில்லிவாக்கம் ஒன்றியம் பாண்டீஸ்வரன் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார். அவர் பொது மக்களிடம் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 274 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News