தமிழ்நாடு

எஸ்பி வேலுமணி

எனது அம்மா நகைகளை தவிர வேறு எதையும் எடுத்து செல்லவில்லை- எஸ்.பி.வேலுமணி சொல்கிறார்

Published On 2022-09-14 07:03 GMT   |   Update On 2022-09-14 07:03 GMT
  • காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது.
  • முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை.

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது.

இதுபற்றி நிருபர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

எனது வீட்டில் ஏற்கனவே 2 முறை சோதனையிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை. 3-வது முறையாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.7100 மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தவிர எனது அம்மாவின் சிறு நகைகளை எடுத்து சென்றுள்ளனர். வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதை அதிகாரிகளே எழுதி கொடுத்து விட்டு சென்று உள்ளனர்.

காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வரவுள்ள நிலையில் எங்களை பழி வாங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரை ஏவி சோதனை நடத்துகிறார்.

மின் கட்டண உயர்வை திசை திருப்பவும் அண்மையில் கோவை, திருப்பூர் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் இருந்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல் அடையாறில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

லஞ்ச ஒழிப்பு துறையினர் என்னுடைய வீட்டில் இரண்டாவது முறையாக சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து கைபேசிகள் இரண்டையே எடுத்து சென்றுள்ளனர்.

முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. என்னுடைய குடும்பத்தாரின் ஆதார் அட்டைகள், பள்ளி சான்றிதழ்கள் போன்றவற்றையே எடுத்து சென்று உள்ளனர். அவை முக்கியமான ஆவணங்களாக இருக்கலாம்.

எடப்பாடி பழனிசாமியுடன் துணை நிற்போரின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை மத்திய அரசே வழங்குகிறது. மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்குகிறது.

மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்ததற்காக என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றால், தி.மு.க. ஆட்சியில் கல்லூரி தொடங்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு எல்லாம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

Tags:    

Similar News