தமிழ்நாடு செய்திகள்

மேலப்பாளையம் ஆசாத் ரோட்டில் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும் காட்சி.

மண்டல சேர்மன்-கவுன்சிலர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம்

Published On 2023-07-17 11:32 IST   |   Update On 2023-07-17 11:32:00 IST
  • வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் போலீஸ் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
  • போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள், வாடகை கார் டிரைவர்களும் தங்களது வாகனங்களை இன்று இயக்கவில்லை.

நெல்லை:

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவும், காரும் எதிர்பாராத விதமாக மோதியது. இதுதொடர்பாக அந்த 2 வாகனங்களின் உரிமையாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியில் நின்ற சிலர் அவர்கள் 2 பேரையும் விலக்கிவிட்டனர்.

அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் மேலப்பாளையம் போலீசார் 5 வாலிபர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக நிலையத்தில் பொய்யான புகாரின் அடிப்படையில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அங்கு தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், ஜமாத் பிரமுகர்கள் ஒன்றிணைந்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் போலீஸ் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் பேச்சு வார்த்தைக்கு சென்றபோது அனைத்து கட்சி நிர்வாகி களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு சென்ற மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதிஜா இக்லாம் பாசிலா, மாமன்ற கவுன்சிலர்கள் ரம்ஜான் அலி, ஷேக் மன்சூர், நித்திய பாலையா உட்பட 8 கவுன்சிலர்கள், பிற அரசியல் கட்சி மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலர் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை ரத்து செய்யக்கோரி போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து அனைத்து கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் வழக்கினை வாபஸ் பெறாவிட்டால், கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நேற்று நெல்லை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மேலப்பாளை யத்தில் போலீசாரை கண்டித்து அனைத்து வியாபாரி கள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து அமைப்பினர், அனைத்து ஜமாத்துகள் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போலீசார் போட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருளான பால், மருந்து கடைகள் உள்ளிட்ட ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தது. சில மீன்கடைகளும் திறந்திருந்தன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள், வாடகை கார் டிரைவர்களும் தங்களது வாகனங்களை இன்று இயக்கவில்லை. அவை சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது.

சந்தை முக்கு ரவுண்டானா உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மேலப்பாளையம் பகுதியில் அத்தியாவசிய பணிகள் முடங்கியுள்ளன. அதே நேரத்தில் குறிச்சி மற்றும் கருங்குளம் பகுதிகளில் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. அங்கு ஆட்டோ, வேன், வாடகை கார்கள் ஓடின.

Tags:    

Similar News