தமிழ்நாடு செய்திகள்

சீமான் பேட்டியளித்தபோது எடுத்த படம்.

தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜ.க. தயாரா?- சீமான் கேள்வி

Published On 2022-06-10 10:55 IST   |   Update On 2022-06-10 12:37:00 IST
  • பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு மற்றவர்களுக்கு பல மடங்கு கட்டணத்தை அதிகரித்து விட்டார்கள்.
  • கேரளாவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் மாற்று கட்சிகளை சார்ந்த 60-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா அரியக்குடியில் நடந்தது.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி செயலாளர் சாயல்ராம் தலைமை தாங்கினார்.

தற்போது ஆளும் தி.மு.க. அரசு எதை சாதித்து விட்டது? ஓராண்டு சாதனை என எதற்கு இந்த விளம்பரம்? பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு மற்றவர்களுக்கு பல மடங்கு கட்டணத்தை அதிகரித்து விட்டார்கள்.

ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கும், ஊழல் குற்றச்சாட்டு கூறுவதற்கும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது? பிரான்ஸ் நாட்டிடம் வாங்கிய ரபேல் விமான ஊழல் வழக்கின்போது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்த கோப்புகளை காணவில்லை என்று கூறினீர்களே. கோப்புகளையே பாதுகாக்க முடியாத நீங்களா நாட்டை பாதுகாப்பீர்கள்?

கேரளாவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்லியில் நட்சத்திர விடுதி போல அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கல்வியின் தரம் எவ்வாறு இருக்கிறது?

இங்கு உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவது நாம்தமிழர் கட்சி மட்டுமே. நாங்கள்தான் தினமும் சண்டை போடுகிறோம். முறைகேடுகளை முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களின் கவனத்திற்கு நாங்கள்தான் கொண்டு செல்கிறோம்.

அ.தி.மு.க., பா.ம.க. ஆகியோர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாலேயே, அந்த கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைகிறார்கள். அண்ணாமலையால் வரும் தேர்தல்களில் எங்களைப்போல் தனித்து போட்டியிட தைரியம் உள்ளதா?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News