தமிழ்நாடு செய்திகள்

தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்- சமத்துவ மக்கள் கட்சியினர் 200 பேர் கைது

Published On 2022-12-13 14:08 IST   |   Update On 2022-12-13 14:08:00 IST
  • போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
  • கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில்:

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று தமிழக முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

நாகர்கோவிலில் போராட்டம் நடத்துவதற்கு சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு திரண்டனர். போராட்டத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் கால்டுவின் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் செண்பகவல்லி முன்னிலை வகித்தார்.

மாநில கலை இலக்கிய துணை செயலாளர் அமலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் டார்வின் தாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், ஜெபஸ்டின், தெற்கு மண்டல தலைவர் நலன் குமார், மகளிர் அணி செயலாளர் சந்திரா, தொண்டரணி செயலாளர் ராஜேஷ் மற்றும் ரதீஷ், எபனேசர், பாபு, செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் போதை பொருளை தடை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கு மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News