தமிழ்நாடு

சேலத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 380.4 மி.மீ. பெய்துள்ளது: வழக்கத்தை விட 6 சதவீதம் குறைவு

Published On 2023-10-02 05:34 GMT   |   Update On 2023-10-02 05:34 GMT
  • தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்தாலும் இன்னும் மழை காலம் முழுவதும் நிறைவு பெறவில்லை.
  • சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்கள் உள்ளன.

சேலம்:

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிக அளவிலும், அதே போல கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்யும், ஆனால் சேலம் மாவட்டம் 2 பருவமழைகளும் அதிக அளவில் பெய்யும் சிறப்பு வாய்ந்த மாவட்டமாக உள்ளது.

அதன்படி தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை பெய்யும், நடப்பாண்டில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்துள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவாக 406.4 மி.மீ. பெய்யும், ஆனால் இந்த ஆண்டு 380.4 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் வழக்கத்தை விட 26 மி.மீ. மழை குறைவாக பெய்துள்ளது. இது ஆண்டு சராசரி மழை அளவை விட 6 சதவீதம் குறைவாகும்.

தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்தாலும் இன்னும் மழை காலம் முழுவதும் நிறைவு பெறவில்லை. இதனால் இன்னும் சில நாட்கள் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்கள் உள்ளன. இதில் பெரிய ஏரிகளில் டேனீஸ்பேட்டை ஏரி, எடப்பாடி பெரிய ஏரி உள்பட சில ஏரிகள் மட்டுமே நிரம்பி உள்ளன. மேலும் பல ஏரிகள் பாதியளவும், ஒரு சில ஏரிகள் தண்ணீர் இல்லாமலும் காட்சி அளிக்கின்றன. இதனால் சேலம் மாவட்டத்தில் வழக்கத்தை விட நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News