தமிழ்நாடு

போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ரத்த தானம் செய்த காட்சி

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு சீருடையில் சென்று ரத்த தானம் செய்த சேலம் போலீஸ் சூப்பிரண்டு

Published On 2023-07-28 08:08 GMT   |   Update On 2023-07-28 08:08 GMT
  • அறுவை சிகிச்சைக்கு AB+ வகை ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது.
  • ரத்த தானம் செய்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

சேலம்:

டெல்லியை சேர்ந்த ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவதற்காக மாற்று கல்லீரல் பெறுவதற்கு விண்ணப்பித்து காத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த 20 வயது இளம்பெண் விபத்தில் மூளைச்சாவடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து கல்லீரலுக்காக பதிவு செய்து காத்திருந்த டெல்லியை சேர்ந்தவருக்கு, இளம்பெண்ணின் கல்லீரலை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதற்காக முடிவு செய்யப்பட்டது.

இதற்காக நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணின் கல்லீரல் கோவை மருத்துவமனையில் இருந்து 2 மணி நேரத்தில் சேலத்தில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு AB+ வகை ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் அவசரம் கருதி சீருடையிலேயே உடனடியாக காவிரி மருத்துவமனைக்கு விரைந்தார். பின்னர் அங்கு ரத்த தானமும் செய்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொடங்கி நேற்று காலை 6 மணி அளவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. தற்போது கல்லீரல் பொருத்தப்பட்டவர் நலமாக உள்ளார்.

இதையடுத்து கால நேரம் பாராமல் உடனடியாக வந்து ரத்த தானம் செய்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இந்த தகவல் அறிந்த பல்வேறு தரப்பினரும், போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News