தமிழ்நாடு

அ.தி.மு.க. செயலாளருக்கு சொந்தமான காரையும், அதில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் படத்தில் காணலாம்.

அ.தி.மு.க. செயலாளரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்: ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை

Published On 2024-03-19 07:16 GMT   |   Update On 2024-03-19 07:16 GMT
  • மதுரை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

உசிலம்பட்டி:

பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பணபட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தற்போது இருந்தே தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும், இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படை என நடத்திய சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியுள்ளன.

மதுரை மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை பிரிவில் அதிகாரிகள் வாகன சோதனைகள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அ.தி.மு.க. கொடி கட்டிய கார் அந்த வழியாக வந்தது. உடனே அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியை அடுத்துள்ள காராம்பட்டி யைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கிருபாகரன் (வயது 29) இருந்தார்.

தொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் கிருபாகரனிடம் இல்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News