தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட பழமைவாய்ந்த சாமி சிலைகளை காணலாம்

300 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகள் மீட்பு- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு டி.ஜி.பி. வெகுமதி

Published On 2022-08-04 03:25 GMT   |   Update On 2022-08-04 03:25 GMT
  • மீட்கப்பட்ட சிலைகளை தொல்லியல்துறை வல்லுநர் ஸ்ரீதரன் ஆய்வு செய்தார்.
  • சிலை கடத்தல் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து பமீலா இமானுவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னை பிராட்வே பிடாரியார் கோவில் தெருவில் பமீலா இமானுவேல் என்பவர் வீட்டில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பழங்கால கோவில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இந்த பிரிவின் போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவின்பேரில் ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு ரவி ஆலோசனையின்பேரில் டி.எஸ்.பி.க்கள் முத்துராஜா, மோகன், இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், வசந்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

உடனே தனிப்படை போலீசார் குறிப்பிட்ட வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். இதில் தட்சிணாமூர்த்தி சாமி சிலை முதலில் சிக்கியது. தொடர்ந்து போலீசார் அந்த வீட்டை அலசி ஆராய்ந்தபோது ரகசிய அறை ஒன்றை கண்டுபிடித்தனர்.

அந்த அறையில், முருகன், வள்ளி, தெய்வானை, சனீஸ்வரன், அம்மன், வீரபாகு ஆகிய சாமி சிலைகளும், பீடத்துடன் கூடிய 2 பெண் தெய்வங்கள், என 9 சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பமீலா இமானுவேலுவின் கணவர் மானுவல் ஆர்.பினிரோ சிலைகளை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தி வந்துள்ளார். அவர் திடீரென்று மரணமடைந்துவிட்டதால், இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முடியாமல் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மீட்கப்பட்ட சிலைகளை தொல்லியல்துறை வல்லுநர் ஸ்ரீதரன் ஆய்வு செய்தார். இதில் 9 சிலைகளில் 7 சிலைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்தது என்பதும், சர்வதேச சந்தையில் இந்த சிலைகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பு இருப்பதும் தெரிய வந்தது.

இந்த சிலைகள் எந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டவை? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிலை கடத்தல் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து பமீலா இமானுவேலுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளுக்கு சாமி சிலைகள் கடத்தலை ரகசியமாக கண்காணித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சென்னையில் 9 சாமி சிலைகளை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுமதி வழங்கி பாராட்டி உள்ளார்.

Tags:    

Similar News