தமிழ்நாடு

மெரினா கடற்கரையில் மாயமான 15 குழந்தைகள் மீட்பு

Published On 2023-01-18 03:00 GMT   |   Update On 2023-01-18 03:00 GMT
  • மாயமான 15 குழந்தைகள் இந்த அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டனர்.
  • பெண்களை கேலி-கிண்டல் செய்த நபர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

சென்னை:

காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் குழந்தைகள் மாயமானால் எளிதில் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் கையில் பெற்றோரின் செல்போன் எண்ணுடன் கூடிய அடையாள அட்டை கட்டி விடப்பட்டது. நேற்றிரவு 7 மணி நிலவரப்படி 10 ஆயிரம் குழந்தைகள் கையில் இந்த அட்டை கட்டப்பட்டது.

இந்த நிலையில் மாயமான 15 குழந்தைகள் இந்த அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டனர். ஒலிப்பெருக்கி மூலம் தகவல் கொடுத்து குழந்தைகளை குடும்பத்தினருடன் பத்திரமாக ஒப்படைத்தனர். சமூக விரோதிகள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக 9 தனிப்படை போலீசார் கண்காணித்தனர். அப்போது பெண்களை கேலி-கிண்டல் செய்த நபர்களை விரட்டி அடித்தனர்.

குற்ற வழக்கு பின்னணி உள்ளவர்கள் வருகிறார்களா என்பதை முக அடையாள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். இந்த கேமராவில் சிக்கியவர்களை போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News