தமிழ்நாடு செய்திகள்

ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்.

பிரசவத்திற்காக அடர்ந்த வனத்திற்கு நடுவே பழங்குடியின கர்ப்பிணி பெண்ணை தொட்டிலில் தூக்கி வந்த உறவினர்கள்

Published On 2022-12-12 14:18 IST   |   Update On 2022-12-12 14:18:00 IST
  • உறவினர்கள் தொட்டில் கட்டி அதில் சுமதியை உட்கார வைத்து தூக்கி கொண்டு நடைபயணமாக புறப்பட்டனர்.
  • வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வனத்திற்கு நடுவே 3 கி.மீ தூரம் சுமதியை உறவினர்கள் தூக்கி வந்தனர்.

மேட்டுப்பாளையம்:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அடுத்துள்ளது புதூர் ஊராட்சி.

இங்குள்ள மண்ணா மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட பவானி ஆற்றை கடந்து தொங்கு பாலம் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு சுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். நள்ளிரவு நேரம் என்பதால் என்னசெய்வது என்று தெரியாமல் உறவினர்கள் தவித்தனர்.

பின்னர் தொட்டில் கட்டி அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து உறவினர்கள் தொட்டில் கட்டி அதில் சுமதியை உட்கார வைத்து தூக்கி கொண்டு நடைபயணமாக புறப்பட்டனர்.

தங்கள் ஊருக்கு நடுவே உள்ள பவானி ஆற்றை அங்குள்ள தொங்கு பாலத்தின் வழியே கடந்தனர். பின்னர் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வனத்திற்கு நடுவே 3 கி.மீ தூரம் சுமதியை தூக்கி வந்தனர். பிரதான சாலை வந்ததும், 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அட்டப்பாடி கோட்டத்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கர்ப்பிணி பெண்ணை அவரது உறவினர்கள் தொட்டில் கட்டி தூக்கி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News