தமிழ்நாடு செய்திகள்

திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

இன்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: குமரியில் மேலும் 13 வீடுகள் இடிந்தது

Published On 2023-11-24 10:50 IST   |   Update On 2023-11-24 10:50:00 IST
  • நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.
  • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.46 அடியாக உள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

2000-க்கு மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகள் மற்றும் பாசன குளங்களின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். தக்கலை, மாம்பழத்துறையாறு, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை, சிற்றாறு பகுதிகளில் நேற்று இரவும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்யத்தொடங்கியது.

இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். தக்கலை, திருவட்டார், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, சிற்றாறு, மாம்பழத்துறையாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று பெருஞ்சாணி அணையில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

4 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் அருவியில் குளிப்பதற்கு இன்று 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வள்ளியாறு, பரளியாறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆறுகளிலும், சானல்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களை சூழ்ந்தது. திக்குறிச்சி பகுதியில் விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வாழை, மரவள்ளி கிழங்கு, காய்கறி பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. முன்சிறை பகுதியில் குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மழைக்கு நேற்று ஒரே நாளில் 13 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடும், கல்குளம் தாலுகாவில் 2 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 6 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 4 வீடுகளும் மழைக்கு இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உதயகிரி கோட்டை பூங்காவில் தேங்கி இருந்த தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.02 அடியாக உள்ளது. அணைக்கு 611 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 509 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.46 அடியாக உள்ளது. அணைக்கு 586 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 300 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்படுகிறது.

சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணைக்கு 526 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 536 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 52 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 52 கன அடி தண்ணீரை உபரிநீராக வெளியேற்றி வருகிறார்கள்.

முக்கடல் அணையின் நீர்மட்டம் 25 அடி எட்டி நிரம்பி வழிகிறது. அணையிலிருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News