தமிழ்நாடு

பொன்முடி விவகாரத்தில் ராகுல் காந்தி நடைமுறை பின்பற்றபடும்- சபாநாயகர்

Published On 2024-03-12 07:19 GMT   |   Update On 2024-03-12 07:50 GMT
  • சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது.
  • கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம்.

நெல்லை:

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது.

அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது. எனவே அவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ. வாய்ப்பு வழங்குவது தொடர்பாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் பரிசீலிக்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு எங்களுடைய சட்டப்பேரவை முதன்மைச் செயலாளருடன் கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதை நீங்கள் விரைவில் பார்க்கலாம்.

கால்டுவெல், ஜி. யு.போப் பற்றி கூறியபோது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெள்ளைக்காரர்கள் தான் இந்திய கலாசாரத்தை அழித்தார்கள் என்று பேசினார். அதேபோல் பலரும் பேசி வருகிறார்கள்.

பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்பு இந்திய கலாசாரம் எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்போது உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். அவர்கள் தான் சொத்து வாங்க முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் வெள்ளைக்காரர்களான கால்டுவெல், ஜி. யு.போப் போன்றவர்கள் வந்த பிறகுதான் எல்லோரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் மத போதகர்களாக வந்தாலும், அதைத்தாண்டி இந்திய, தமிழக கலாசாரத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள்.

தமிழர்கள், இந்தியர்களுக்கு இலவச கல்வி கொடுத்தார்கள். நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம். உயர் ஜாதியினர் மட்டுமே கல்வி கற்கும் முறையை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள் தான். கால்டுவெல்லை அங்குள்ள 90 சதவீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News