தமிழ்நாடு செய்திகள்

தலைமுடிக்கு கலர் அடித்து, புள்ளிங்கோ கட்டிங், அலங்காரத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்

Published On 2023-01-10 13:01 IST   |   Update On 2023-01-10 13:01:00 IST
  • துணிச்சலான ஆசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் பணம் கொடுத்து மாணவர்களை முடித்திருக்கும் கடைக்கு அனுப்பி வைத்து சொந்த செலவில் முடி வெட்ட வைத்துள்ளனர்.
  • தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது குறைவாக உள்ளது.

வேலூர்:

அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் சமீபகாலமாக பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்வது, வகுப்பறையில் நடனம் ஆடுவது, ஆசிரியர்களை மிரட்டுவது உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் முடிவெட்டும்போது, தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் என புள்ளிங்கோ மாதிரி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இதுபோன்ற அலங்காரங்களை தவிர்த்து, பள்ளி சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் சிகை அலங்காரம் செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. இது போன்ற மாணவர்களுக்கு முடி அலங்காரம் செய்யக்கூடாது என வேலூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திரும்பிய மாணவர்கள் பலர் புள்ளிங்கோ கட்டிங் உடன் பள்ளிக்கு வந்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் சிகை அலங்காரம் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமான கோணத்தில் வெட்டியும் கலர் அடித்தும் வருகின்றனர்.

அவர்களை பார்த்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படி அவர்களை கண்டிப்பது அறிவுரை வழங்குவது என திகைத்துப்போய் நிற்கின்றனர்.

துணிச்சலான ஆசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் பணம் கொடுத்து மாணவர்களை முடித்திருக்கும் கடைக்கு அனுப்பி வைத்து சொந்த செலவில் முடி வெட்ட வைத்துள்ளனர்.

தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது குறைவாக உள்ளது.

ஆனால் அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் வரை இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். தட்டிகேட்கும் ஆசிரியர்களையும் முறைக்கும் அவல நிலையும் உள்ளது.

மாணவர்களை கண்டிக்க பயந்துபல ஆசிரியர்கள் தங்களுக்கு ஏன் வம்பு என்று இருக்கின்றனர். மேலும் இதுபோல சில மாணவர்களின் செயல்பாட்டால் பல ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

ஆசிரியர்கள் கண்டிக்க கூடாது, அடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ள கல்வித்துறை இப்பேற்பட்ட மாணவர்களை எப்படி கையாள்வது அவர்களை எப்படி திருத்துவது என்பதை ஆசிரியர்களுக்கு போதிக்க வேண்டும்.

அல்லது சரியான கட்டுப்பாட்டு வழிமுறைகளை கல்வித்துறை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News