எல்லை தாண்டியதாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று சிறைப்பிடிப்பு
- கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
- தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவது மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 97 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லை பகுதியான நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி வந்து எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ரத்தீஸ் (வயது 38) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் இருந்த மீனவர்கள் அருள் (36), அய்யப்பன் (30), சுந்தரம் (26) ஆகிய 3 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களிடம் இலங்கையில் உள்ள காங்கேசன் துறையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
இதையடுத்து கடந்த 3-ந்தேதி அங்குள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட 8 மீனவர்களும் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில்தான் இன்று அதிகாலை மேலும் 3 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவது மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதற்கு முன்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை மீட்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.