ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வருகை: முதுமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு
- ஜனாதிபதி செல்லும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம், மசினகுடி ஹெலிகாப்டர் தளம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
- தெப்பக்காடு அடர்ந்த வனப்பகுதி என்பதால் போலீஸ் மட்டுமின்றி, நக்சல் தடுப்பு பிரிவினர், அதிரடிப்படை பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள யானைகள், பாகன்களுக்கு இடையேயான பாச பிணைப்பை பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றது.
மேலும் இந்த படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலைக்கு வருகிறார்.
இதற்காக அவர் நாளை காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடியில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க 3.45 மணியளவில் 12 கி.மீ. தொலைவில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.
முகாமில் பாகன் தம்பதிகள் பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்டு தெரிவித்து அவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார். மேலும் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உணவு வழங்குகிறார்.
தொடர்ந்து அங்குள்ள ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களையும் சந்தித்து பேசுகிறார். மேலும் அங்குள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பார்வையிடுகிறார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து கொண்டு, மீண்டும் மாலை 4.45 மணிக்கு தெப்பக்காடு முகாமில் இருந்து காரில் புறப்பட்டு மசினகுடி ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து சென்னை செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவருக்கு வரவேற்பு அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த 31-ந் தேதியில் இருந்து நாளை வரை தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.
ஜனாதிபதியை வருவதையொட்டி 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 18 ஏ.டி.எஸ்.பிக்கள், 36 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி செல்லும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம், மசினகுடி ஹெலிகாப்டர் தளம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தெப்பக்காடு அடர்ந்த வனப்பகுதி என்பதால் போலீஸ் மட்டுமின்றி, நக்சல் தடுப்பு பிரிவினர், அதிரடிப்படை பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு மைசூரில் இருந்து மசினகுடிக்கு ஹெலிகாப்டரில் வருவதையொட்டி, நேற்று 2 ஹெலிகாப்டர்கள் தனித்தனியாக இயக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது மைசூரில் இருந்து மசினகுடி ஹெலிபேடுவுக்கு 2 ஹெலிகாப்டர்கள் தனித்தனியாக இயக்கப்பட்டு வந்து மீண்டும் திரும்பி செல்வதன் மூலம் ஒத்திகை நடைபெற்றது.
இதற்கிடையே நேற்று தெப்பக்காடு யானைகள் முகாம் கூட்டரங்களில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் ஆலோசனை நடந்தது.
கூட்டத்தில் தலைமை முதன்மை வன உயிரின காப்பாளர் சீனிவாச ரெட்டி, கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வருகைக்கான ஏற்பாடு பணிகள், துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டது.