தமிழ்நாடு செய்திகள்

பவித்ரா

காதல் கணவர் வீட்டு முன்பு கர்ப்பிணி பெண் 2-வது நாளாக போராட்டம்

Published On 2023-08-24 15:55 IST   |   Update On 2023-08-24 15:55:00 IST
  • இருவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தற்போது பவித்ரா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
  • கர்ப்பிணி பவித்ரா நேற்று மண்எண்ணெய் கேனுடன் மோகன்ராஜின் வீட்டிற்கு சென்றார்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த பஸ் பழுது பார்க்கும் பட்டறை உரிமையாளர் மோகன்ராஜூம், பவித்ராவும் 5 வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த மே மாதம் 22-ந் தேதி காஞ்சிபுரம் சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தற்போது பவித்ரா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இந்த நிலையில் மோகன்ராஜின் சகோதரிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக ஓமலூர் வந்த தன் கணவனை அவரது பெற்றோர் மறைத்து வைத்து கொண்டு அவருக்கு வேறு திருமணம் செய்ய முயற்சி செய்கின்றனர்.

இதுகுறித்து கேட்டபோது தன்னை மிரட்டி அனுப்பியதாகவும், தனது கணவரை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும் கோரி சேலம் போலீஸ் சூப்பிரண்டிடம் பவித்ரா புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கர்ப்பிணி பவித்ரா நேற்று மண்எண்ணெய் கேனுடன் மோகன்ராஜின் வீட்டிற்கு சென்றார். தனது கணவரை சேர்த்து வைக்க கோரி வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே மோகன்ராஜின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர். போலீசாரும் இதுகுறித்து எந்தவித விசாரணையும் நடத்தாத நிலையில் தொடர்ந்து இன்று 2-வது நாளாக பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News