தமிழ்நாடு

லிப்ட்டில் இருந்து மீட்கப்பட்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.எல்.ஏ. பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் வெளியே வந்த காட்சி.

லிப்ட் பழுதால் 30 நிமிடங்கள் சிக்கித்தவித்த அமைச்சர் சிவசங்கர்- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Published On 2023-01-05 08:27 GMT   |   Update On 2023-01-05 08:29 GMT
  • லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் உடனிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
  • கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள லிப்டுகளை பராமரிக்க செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வகையில் லிப்ட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் அதிக அளவில் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில் கலெக்டர் அலுவலக வாளத்தில் உள்ள கூட்டரங்கில் பெரம்பலூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல், கூட்டுறவுத் துறையின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணை வழங்குதல் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக இன்று காலை போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரனும் உடனிருந்தார். இவர்கள் இருவரும் மேல் தளத்திற்கு செல்வதற்காக அங்கு இருந்த லிப்டில் ஏறி சென்றனர்.

அப்போது திடீரென லிப்டின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து ஆபத்து மற்றும் அவசர கால கதவின் வழியே, சிக்கிக்கொண்ட அனைவரையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 30 நிமிடங்களாக நடந்த போராட்டத்திற்கு பின் லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் உடனிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள லிப்டுகளை பராமரிக்க செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் 30 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News